சென்னையில் காவல் துறை அதிகாரி 22 பக்கம் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபாது என்பவருடன் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஷிஷன்சிங் , ஷைஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜினிகுமார் நட்டாலத்தில் உள்ள தனது மனைவி குழந்தைகளை சந்திக்க கடந்த 6ஆம் தேதி சென்றார். மனைவி குழந்தைகளை பார்க்கச் சென்ற ஜினி குமாரிடம், நட்டாலம் வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துக்களை மனைவி ஷெலின் ஷீபாது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று அவரது மனைவி,மைத்துனர்,மாமியார் ஆகியோர் கட்டாயப்படுத்தி அடித்து உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ஜினிகுமார் அவரது வீட்டில் 22 பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமானார். அக்கடிதத்தில், தன் இளவயதில் தன் தாய் தந்தை இருவரும் கஷ்டப்பட்டு தன்னையும், தன் சகோதரியையும் வளர்த்தது பற்றியும், கஷ்ட காலத்திலும் தன்னை கல்லூரியில் படிக்க வைத்து காவல்துறை பணி கிடைக்கச் செய்த பெற்றோர்கள் குறித்தும் எழுதியுள்ளார்.
தனது மனைவி பிள்ளைகளை சந்திக்க சென்ற போது அவரை அவரது மாமியார், மனைவி, மைத்துனர் சேர்ந்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள போகிறேன் என்று எழுதியுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஜினி குமாரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.