இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 62 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகியது. அதனால் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக இந்தோனேசிய அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜாவா கடலில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், விமானிகளின் உடல் பாகங்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து விமானம் நொறுங்கி விழுந்தது அதிபர் உறுதி செய்துள்ளார்.