Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குக்கு பணமே வேண்டாம்…! மாஸ் காட்டிய அமைச்சர் தொகுதி…. கோவில்பட்டி ஓர் பார்வை …!!

கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை  கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம்  கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் உள்ளது. கோவில்பட்டியில்  தீப்பெட்டி ஆலைகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் பணிபுரிகின்றனர். இதைத் தவிர தொழில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தொழிலும், ஐந்தாயிரம் பேர் பணிபுரியும் நூற்பாலைகளும் உள்ளன.

கோவில்பட்டி நகராட்சியில்  கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகள் மற்றும் 81 ஊராட்சிகளை உள்ளடக்கியது. கோவில்பட்டி தொகுதியில்  மொத்த வாக்காளர்களின்  எண்ணிக்கை 2,66,000 ம் ஆக உள்ளது.கோவில்பட்டியில்  செண்பகவல்லி அம்மன் கோயில், கயத்தாறு பகுதியில் வீரபாண்டி கட்டபொம்மன் மணிமண்டபம், கழுகுமலை குடைவரை கோவில் மற்றும் கழுகாச்சலமூர்த்தி கோயில் இத்தொகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களாகும்.

தற்போது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும் கடம்பூர் சே ராஜு உள்ளார். எழுத்துலக கலைஞர்களைப் பொறுத்தவரை புகழ்பெற்ற எழுத்தாளர்களான ராஜநாராயணன், சோ தர்மன், பூமணி போன்றோரெல்லாம் மண்ணுக்கான அடையாளங்களாக பார்க்கப்படுகிறார்கள். இந்த தொகுதியில் பிரதான பிரச்சனையாக குடிநீர் பிரச்சினை இருந்தது. கோவில்பட்டி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் உள்ள சீவலப்பேரி இரண்டாவது பைப் லைன் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதி உள்ள நிலையில்  தற்போது இரண்டாவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தல் வாக்குறுதிப்படி கோவில்பட்டியில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை அமைச்சர் கடம்பூர் ராஜு தொகுதிக்கு செய்துள்ளார். இளையரசனேந்தல் சாலையிலுள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். மானாவாரி பயிர்களை உரிய விலை கிடைக்கும் வரை பாதுகாத்து வைக்க போதிய குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் நீடிக்கின்றன.

நலிவடையும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இத்தொகுதி உள்ளது. 40 ஆண்டு காலமாக தீராத தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று கோவில்பட்டி தொகுதி மக்கள் ஒருபுறம் நிம்மதி பெற்றாலும்,  தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய சீரற்ற சாலைகள் தங்களுக்கு மிகப்பெரிய தலைவலி இருப்பதாக அதிருப்தி தெரிவிக்கிறார்கள். நிறை குறை என இரு வேறு பட்ட மனநிலையில் கோவில்பட்டி தொகுதி மக்கள் காணப்பட்டாலும் வாக்கு மட்டும் பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதிப்பாடும் பரவலான வாக்காளர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

Categories

Tech |