Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து… மகள் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாசித் . இவரது மனைவி ஸ்ருதி. இத்தம்பதியருக்கு ஆதிரா என்ற குழந்தை உள்ளது. மாசித்  திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி தனது தாய் சந்திரிகா மற்றும்  தனது மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் துணிக்கடைக்கு சென்று விட்டு மூவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். ஸ்ருதி ஸ்கூட்டரை ஓட்ட  தாய் சந்திரிகாவும்,  மகள் ஆதிராவும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில்  மோதியது. இதனால்  ஸ்கூட்டரிலிருந்து  3 பேரும் கீழே விழுந்தனர். மேலும் சந்திரிகாவின் இடுப்பு பகுதியில் பேருந்தின்  பின் சக்கரம் ஏறி இறங்கியது. அதிர்ஷ்டவசமாக ஸ்ருதியும் குழந்தை  ஆதிராவும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தனர். கண் முன்னே  தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து ஸ்ருதி கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் சந்திரிகாவை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் ஸ்கூட்டரிலிருந்து இருந்து மூன்று பேர் முழுவதும் , சந்திரிகா மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக வளைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |