புயல்,மழை பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கீடு செய்யும் அதிகாரிகள் எலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பாசன வசதிக்காக குறிப்பிடப்பட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முப்போகம் சாகுபடி நடைபெறும் நிலையில் தற்போது புயல் மழை காரணங்களால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. இந்நிலையில் மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து குறிப்பெடுத்து வருகின்றனர்.
புயல் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எலிகளாளும் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு, வைரப்பெருமாள்பட்டி, பூதலூர் உள்ளிட்ட ஊர்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை எலிகள் பெருமளவில் தாக்கி வருவதால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். அப்பகுதிகளில் இதுவரை 1000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்களை எலிகள் நாசமாக்கியுள்ளது.
இதுவரையில் 800-க்கும் மேற்பட்ட எலிகள் பிடிக்கப்பட்டு இருந்தாலும் எலிகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. ஒரு எலியை பிடிப்பதற்கு ரூபாய் முப்பது செலவாகும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 200 வரை செலவாகிறது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கிடு செய்வது போல எலிகளால் ஏற்பட்ட பாதிப்பையும் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்ககோரி தமிழ்நாடு அரசிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.