திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது கார் மோதியதி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகரத்தில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சண்முகையா தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் சண்முகையா மற்றும் அவருடன் இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, சங்கரன்கோவிலிலிருந்து திருநெல்வேலியை நோக்கி வந்த கார் ஒன்று சண்முகையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சண்முகையா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானூர் போலீசார் விரைந்து வந்து சன்முகையாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.