சாலையில் இருக்கும் குழியை இரண்டு சிறு குழந்தைகள் கட்டையை வைத்து அடைக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதேசமயம் சாலையோரம் இருக்கும் குழிகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது . இதனால் மக்கள் சிலர் குழி இருப்பது தெரியாமல் குழிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்து வரும்போது சாலையோரம் இருக்கும் குழியை ஒரு குழந்தை கட்டையை போட்டு அடைப்பதும் , அக்குழந்தைக்கு அருகில் இருந்த குழந்தை குடை பிடித்து நிற்பதும் போன்ற காணொளி பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மாநகராட்சி நிர்வாகம் செய்யக்கூடிய வேலையை இந்த பிஞ்சு குழந்தைகள் செய்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த காணொளி கோவையில் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகளை பாராட்டும் விதகமாக பலரும் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.