லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெற்றிவேல் என்பவர் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு டாரஸ் லாரியில் புறப்பட்டார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எதிரே லாரி சென்று கொண்டிருக்கும் பொழுது, அதன் டயர் வெடித்து லாரி நிலைதடுமாறி ஓடியது. அச்சமயத்தில் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயற்சிக்கும் பொழுது, திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை ஏற்றிச் சென்ற மினி வேன் ஒன்று லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் வந்த நக்கலைபட்டியில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவரும், கீழ உரப்பனூர் பகுதியில் வசித்து வரும் கவின் என்பவரும், குதிரைசாதி குலம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். ஆனால் சிலம்பரசன் மற்றும் கவின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விஜய் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.