கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்திலுள்ள ஆஷ் ஷர்க்கியா என்ற மாகாணத்தில் இருக்கும் எல் ஹூசைனியா என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆக்சிஜன் அளவு இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால் கொரனோ பாதித்த நோயாளிகள் அனைவருமே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நோயாளிகள் உயிரிழந்த காட்சிகளை நோயாளியின் உறவினர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதாவது இந்த காணொளியில் எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று அரேபிய மொழியில் ஒருவர் கதறுவது வெளியாகியுள்ளது. மேலும் செவிலியர்கள் மட்டும் தான் மீதம் உள்ளார்கள் என்றும் கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் அந்த காணொளியில் கொரோனா நோயாளிகள் அனைவரும் படுக்கையில் எவ்வித அசைவுமின்றி படுத்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து செவிலியர்கள் விரைவாக இயங்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு எகிப்தின் கற்பியா என்ற மாகாணத்தில் இருக்கும் ஜெப்டா என்ற பொது மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அலட்சியம் போன்றவைகள் தான் இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.