ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்றும்,நாளையும் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இன்று காலை பவானியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, நான் பவானி அரசு பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறுவயதிலேயே பவானியில் உள்ள அனைத்து பகுதிகளும் நன்கு தெரியும். பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள் அனைத்தும் இன்றைக்கு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆகையால் மழைக் காலங்களில் பெய்யும் நீர் முழுவதும் சேமித்து வைத்து இன்று குளம் நிரம்பி வழிவதை பார்க்கிறோம். இதனால் நமக்கு கோடை காலத்திலும் தேவையான நீர் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான நீரை கொடுப்பதும் அரசின் நோக்கம். வேளாண் பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறது.
ஸ்டாலின் மக்களைத் திரட்டி பொய் பிரசாரம் நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்றுதான் செய்தார். தற்போது பெண்களை சேர்த்து வாத்தியார் போல கூட்டம் நடத்தி வருகிறார். அவர் பேசுவதில் ஏதாவது பயனுள்ள செய்தி இருக்கிறதா. அரசு பற்றியும், அரசின் திட்டங்களை பற்றியும் குறை மட்டும் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர், அமைச்சர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டுகளை செலுத்தியுள்ளார்.இதனால் மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இதனை நாங்கள் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும். அவர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார். ஊழல் என்ற சொல்லுக்கே அதிமுகவில் இடமில்லை.மக்களை குழப்பினால் மு.க.ஸ்டாலினுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று கனவு காண்கிறார். ஆனால் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று கூறினார்.