வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 லட்சம் ரூபாய் திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா கணக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக அவருக்கு 3 முறை சம்மன் அனுப்பிய போதும், உடல்நிலையைக் காரணம் காட்டி ஆஜராகமல் இருந்து வந்த நிலையில் மும்பையில் நேற்று ஆஜரான திருமதி. வர்ஷாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி, விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.