தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதிக்கு நடிகர் அரவிந்த்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புதுப்படங்கள் அனைத்தும் ஓடிடி வெளியானது. ஆனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மட்டும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் மற்றும் சிம்பு தமிழக முதல்வரிடம் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து திரையரங்குகள் 100% இருக்கையுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இதனை பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் நடிகர் அரவிந்த்சாமி இதை எதிர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் “சில தருணங்களில் 100 % விட 50% சிறந்தது, இது அந்த சமயம்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.