நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் கூடிய பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸிலுள்ள Dordogne என்ற பகுதியில் இருக்கும் மன்பாசிலாக்கில் நீண்ட நாட்களுக்கு பின் முன்னாள் பள்ளி நண்பர்கள் இணைந்து பார்ட்டி ஒன்றை வித்தியாசமாக முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் நெட்பிலிக்ஸில் கடந்த 2013ஆம் வருடம் வெளியான Peaky blinders என்ற பிரபலமான தொடரில் வரும் கதாபாத்திரங்களை போல வேடமிட்டு வருமாறு பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தின் மாலையில் அந்தத் தொடரில் வருவது போலவே ஒவ்வொருவரும் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு வந்துள்ளனர்.
அதில் ஒருவர் அவரின் தந்தையின் வேட்டை துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் இவர்களின் பார்ட்டி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது. அச்சமயத்தில் நிஜமான வேட்டை துப்பாக்கியை கொண்டு வந்திருந்த 27 வயது இளைஞர் ஒருவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் இருப்பதை அறியாமல் தன் நண்பர் தாமஸ் என்பவர் மீது விளையாட்டாக குறி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியிலிருந்த தோட்டா தாமஸின் இதயத்தில் பாய்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக அவசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக சில நொடிகளிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக ஒன்றுகூடிய பார்ட்டி இறுதியில் சோகம் நிறைந்து காணப்பட்டுள்ளது. மேலும் தாமஸின் பெற்றோர்கள் ஒரே பிள்ளையை இழந்த சோகத்தில் கதறி அழுதுள்ளனர். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அங்கிருந்த மற்ற நபர்கள் அனைவரும் இது அறியாமையால் ஏற்பட்ட விபத்து என்று கூறியுள்ளனர். எனினும் தோட்டாக்கள் லோட் செய்யப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்ட நபரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.