பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா ‘ படம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ‘நாடோடி தென்றல்’ . இதையடுத்து ‘ஆத்தா’ படத்தின் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைப்பட்டது . இந்நிலையில் ஆத்தா படம் கைவிடப்பட்டுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘என் இனிய தமிழ் மக்களே ,15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ‘ஆத்தா’ . இந்தக் கதையை முன்பே படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம் . நடைமுறை நவீன முற்போக்கான இந்த காலகட்டத்தில் வந்த பல சினிமாக்களில் கருவை நாடியுள்ளது இந்த படம். இதை மீண்டும் கையில் எடுத்தால் தொழில் ரீதியாகவும் ,பொருள் ரீதியாகவும் நஷ்டம் ஏற்படும் . இந்த காரணங்களால் ஆத்தா கைவிடப்படுகின்றது . மேலும் புதிய அறிவிப்பு ,புதிய தலைப்பு, புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.