அனைத்து வகுப்புகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதன்பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 17ம் தேதி முதல் முதுகலை மற்றும் இளங்கலை படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் இயங்கும். இதில் 1, 3, 5 மற்றும் 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், மற்றும் வெள்ளிக் கிழமை தினங்களிலும், 2, 4, 6 மற்றும் 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமை தினங்களிலும் நடைபெறும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.
ஆனால் மாணவர்களுக்கான வருகை பதிவேடு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று தங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும், ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 18ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.
இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.