பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறி சிறுமியின் ஆடையில் விழுந்ததால் ஆடை முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீனாவிற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நவீனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.