பீகாரில் பெயரை கேட்ட குடிபோதை ஆசாமி முஸ்லிம் என தெரிந்ததும் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டம் கும்பி கிராமத்தில் 30 வயதான முகமது காசிம் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் தள்ளுவண்டியில் சலவை தூள் வைத்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில், விற்பனை செய்து கொண்டிருந்த அவரை குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர் வழிமறித்துள்ளார். அதன் பின் உனது பெயரென்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் பெயரை சொன்னதும், முஸ்லிமாகிய நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என அந்த போதை ஆசாமி கூறியிருக்கிறார். அதன்பின் ஆசாமி வைத்திருந்த கைத்துப்பாக்கியால் முகமது காசிமை நோக்கி திடீரென சுட்டதில் அவரது பின்பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.

அந்த துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருந்ததால் ஆசாமி துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பினான். இந்த சந்தர்ப்பத்தினை காசிம் சரியாக பயன்படுத்தி அந்த ஆசாமியை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால் அருகில் இருந்தவர்கள் யாருமே அவரை காக்க முன்வரவில்லை. இதன்பின் காயமடைந்த காசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியான ராஜீவ் யாதவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.