மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பா.ஜ.க எம்.பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். அதன் படி குடியரசு தலைவரும் மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைத்திருந்தார்.
இதையடுத்து வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.