ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் தற்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் திட்டமிட்டபடி அரசியல் களத்தில் இறங்குவாரா? என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் எழுந்து வந்தது.
இதனிடையே தான் புது கட்சி தொடங்கப் போவது இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்களும் பொதுமக்களும் பெரும் ஏமாற்றத்தை அளித்து விட்டதாகவும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டை நோக்கி அவரது ரசிகர்கள் படையெடுத்து முடிவை திரும்பப் பெறுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைத்தளங்களிலும் ரஜினியின் ஆதரவாகவும், எதிராகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே விழுப்புரம் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் கூலி வேலை செய்து வருகிறார். சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகனான இவர் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பைக் கேட்டு விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ‘ரஜினி தான் என் வாழ்க்கை இதுதான் எனது கடைசி பதிவு’ என்று கூறிவிட்டு நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். மறுநாள் காலையில் படுக்கையிலேயே உயிரிழந்தார். இது அவரது குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பிற்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.