மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து தொழிலில் ஈடுபடுவர்.
மேலும் இந்த ஆண்டிற்கான பருவம் அக்டோபர் மாதம் முதலே தொடங்கிவிட்டது ஆனால் புயல் போன்ற பலவித காரணங்களால் மீன்பிடித் தொழிலானது சற்று மந்தமாகவே காணப்பட்டது. இந்நிலையில் கோடியக்கரையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள பெரிய பால் சுறா மீன் சிக்கியது. இதனையடுத்து சந்தைக்கு விற்பனைக்கு வந்த இந்த சுறா மீனை நாகப்பட்டினத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் 26,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.