உதகையை அடுத்துள்ள பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானைக்கு, கும்கி யானைகளைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் வனப் பகுதியில், ஒற்றை ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. காயத்தை குணப்படுத்த பழத்திற்குள் மாத்திரைகளை வைத்து அளித்து, வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். காயமடைந்த யானை பொக்காபுரம் அருகே உள்ள வனப்பகுதியில்,
சுற்றித் திரிவதை கண்டறிந்த வனத்துறையினர், சுஜய் மற்றும் வசிம் ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு, அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். காயம் சற்று ஆழமாக உள்ளதால் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும், காயமடைந்த யானை கிராமப்பகுதிக்குள் வரமால் இருக்க, வனத்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டிருப்பர் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.