ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வாட்டிகனில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர்,
ஒடுக்கபட்டவர்கள் மற்றும் ஏழைகள் அனைவரும் கடவுளின் பிள்ளை என்று நமக்கு உணர்த்தும் பொருட்டு, தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஒடுக்கப்பட்டவராக, ஏழ்மையான நிலையில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.
ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.
இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வாட்டிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.