கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் சித்தப்பா குடும்பத்தினர்கள் ஒன்பது பேர் ஒரே இடத்தில் கூடி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி நடனமாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மகாராணியின் வீடு Norfolk என்ற பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் இரண்டாவது அடுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்துள்ளது.
எனவே ஆறு பேர் மட்டும் ஒரே இடத்தில் கூடலாம் என்று விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. அதனை மீறி முதல் முறை அதிக எண்ணிக்கையில் கூடுவோருக்கு 200 பவுண்டுகள் அபராதமும், அதனை மீண்டும் மீறுவோருக்கு 6,400 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விதியை மீறியதாக இளவரசர் குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அரண்மனை தரப்பு கூறுகையில் “இரு குடும்பங்களும் தனியாகத்தான் வந்துள்ளார்கள். தற்செயலாகத்தான் அனைவரும் சந்திக்க நேரிட்டது” என்று கூறியுள்ளனர்.