கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று கைது செய்யப்பட்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த மேலும் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா கொல்லுயிரி தீவிரமாக பரவத் தொடங்கி இருந்த காலகட்டத்தில், டெல்லியில் இஸ்லாமிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கிருமி பரவலுக்கு காரணமாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொரோனா விதிகளை மீறி கூடி இருந்ததாக 236 பேர் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிலிருந்து 2361 அப்புறப்படுத்தப்பட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, சூடான், துனிசியா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத் அமைப்பினர் 952 பேர் மீது கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் என்று வழக்கு தொடரப்பட்டது.
இதில் சுமார் 900 பேர் நீதிமன்ற அனுமதியுடன் தாய் நாடு திரும்பி விட்டனர். 44 பேர் மட்டும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில், அதில் 8 பேரை போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி டெல்லி நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி விடுதலை செய்துவிட்டது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பெருந்தொற்றுக்கு காரணமானவர்கள் என்று கூறி பலிகடா ஆக்கப்பட்டு உள்ளதாக மும்பை அவுரங்காபாத் நீதிமன்றமும் கருத்து கூறியது.
இருப்பினும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 36 பேர் மீது டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில் ஒருவர் கூட டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றும்,
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையால் பிடித்து வரப்பட்டவர்கள் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர் மீதான உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.