தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் ஆளும் மாநில அரசையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்துள்ளார் .
இந்நிலையில் இன்று அரியலூரில் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ,’கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுத்து வருகிறார். பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது. கமல் நாட்டுக்கு நல்லது செய்ய வரவில்லை ,நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுக்க தான் வந்திருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் படங்களில் உள்ள பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருந்தன . ஆனால் கமல்ஹாசன் படத்தில் ஏதாவது நல்ல கருத்துள்ள பாடல் இருக்கிறதா ? நாங்கள் மக்களுக்காக நிறைய நல்லது செய்து இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நல்ல நல்ல கேள்விகளை கேளுங்கள் அதை விட்டுவிட்டு கமல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் .