சென்னை மெரினாவிற்கு குடிபோதையில் வந்த காவலர் அங்கிருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மிகவும் பொழுதுபோக்கான இடமாக மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. தகவலை கேட்ட உடன் மெரினா கடற்கரைக்கு முதல் நாளே மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அங்கு சென்னை ஆயுதப்படை காவலர் பாபுவும் (32) காற்று வாங்க மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.
அப்போது பாபு மது அருந்தி இருந்தார். அங்கு இருக்கும் விவேகானந்தர் இல்லத்தின் பக்கத்தில் ஒரு இளவயது பெண் நின்று கொண்டிருந்தார். அவரது தந்தையோ அருகில் சென்று இருந்தார். தனியாக நிற்கும் அந்த இளம்பெண்ணிடம் போதையில் இருக்கும் காவலர் பாபு மோசமான வார்த்தைகளால் பேசி அப்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரியவந்தது. அப்பெண் எந்த பதிலும் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்தபடி அருகில் சென்ற அவர் தந்தையும் அங்கு வந்தார். அப்பெண்ணின் தந்தை நடந்ததை அறிந்து போதை காவலரை எச்சரித்துள்ளார். பாபு அவரிடம் சண்டையிட தொடங்கினார்.
அதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் போதை காவலர் பாபுவை சரமாரியாக அடித்து உதைத்து பின் மெரினா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மெரினா காவல் துறையினர் உடனடியாக பாபுவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதேபோல் கடந்த வாரம் வடபழனியில் குடிபோதையில் காவலர் ஒருவர் இளம்பெண்ணிடம் தவறான செயலில் ஈடுபட்டதால் அங்கிருந்த பொதுமக்களிடம் அடி வாங்கினார். அதன்பின் அவரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதேபோல் தற்பொழுது மெரினா கடற்கரையில் மீண்டும் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. இச்சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.