அடுத்தடுத்து மூன்று தினங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்ற இரு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதையடுத்து காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை பேரிடர்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு வடக்கே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக மழை வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்யக்கூடும்” என்று அறிவித்துள்ளது.