தமிழகத்தில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆண்கள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் பெண்கள் என்று ஆட்சி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இது பற்றி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமை பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். எவர் ரிலீஸ் செய்யும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை” என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.