பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்த கதாபாத்திரத்தில் சரண்யா நடிப்பதாக வெளியான தகவலுக்கு சரண்யா விளக்கமளித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு தமிழக மக்களின் மனதை உலுக்கிய ஒரு நிகழ்வு. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். ஆனால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நடிக்க வைக்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு முல்லை கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் சித்ரா.
ஆனால் இந்த தொடரில் இனி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க சித்ராவின் தோழியும், நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து ஆகிய தொடர்களிலும் நடித்து வந்த நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக பரவும் செய்தி உண்மையல்ல. முல்லையாக சித்ராதான் மக்கள் மனதில் இருக்கிறார், எப்போதும் இருப்பார்’ என விளக்கியுள்ளார்.