மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை 5 மணி அளவில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக நசரத்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேம்நாத் மற்றும் சித்ரா இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு ஹேம்நாத் ரவி சித்ராவிடம் தகராறு செய்துள்ளதாகவும், அதேபோல் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அவரைப் பிரிந்து வந்து விடுமாறு சித்ராவின் தாயார் ஒருபுறம் அழுத்தம் கொடுத்ததாக தெரிய வருகிறது. எனவே கணவன் மற்றும் தாயார் இருவரும் மத்தியிலும் சிக்கிக்கொண்டு தவிர்த்து சித்திரா மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சித்ராவின் செல்போன் இருந்த குறுஞ்செய்தி அனைத்தும் டெலிட் செய்யப்பட்டுள்ளதால் அவரது செல்போனை ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மூன்றாவது நாளாக ஹேம்நாத் ரவிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.