சேலையூரில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம் அடுத்த காமராஜர் புரத்தை சேர்ந்த 43 வயதான சீனிவாசன் என்பவர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் 12 மணி அளவில் சேலையூர் காவல் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் பெட்ரோல் கேன்னும், தீப்பெட்டியும் வைத்திருந்தார். அதனை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்து போன காவல்துறையினர் அவரை அங்கிருந்து மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்ட அவரை மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.
சினிவாசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்தபோது தனது 13 வயது மகளை காணவில்லை என்று கடந்த 3ஆம் தேதி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அடிக்கடி போலீசிடம் சென்று மகளை குறித்து விசாரித்துள்ளார். அதற்கு காவல் துறையினர் உன்னுடைய மகள் யாருடனாவது ஓடி போயிருப்பார் என்று ஏளனமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.