புரேவி புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்: “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரேவிப்புயல் இன்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது. பாம்பன் அருகே புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பாம்பனுக்கு தென் மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்திற்கும், தூத்துக்குடிக்கும் இடையே இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும். இந்த புயல் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புயல் வலுவிழந்ததால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யக்கூடும்” என்று அவர் கூறினார்.