Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு சண்டை… உயிரை விட்ட பிச்சைக்கார முதியவர்… சாலையில் நடந்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் குமரிமாவட்டம் முதியவர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஆகிய இருவரும் சேர்ந்து பிச்சை எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது கடைக்காரர் இரண்டு ரூபாய் கொடுத்து ஆளுக்கு ஒரு ரூபாயை பிரித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ், தன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் குமரி மாவட்டத்தை சேர்ந்த முதியவரை பலமாக தாக்கியுள்ளார். அதனால் அந்த முதியவருக்கு உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த காட்சியை அங்கு நின்று வேடிக்கை பார்த்தவர்கள் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர்.

அந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், படுகாயமடைந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் என்ற முதியவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |