Categories
தேசிய செய்திகள்

வேலை தான் போச்சு… தன்னம்பிக்கை போகல… பைவ் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரின் மன உறுதி..!!

கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர் மன உறுதியை கைவிடாமல் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்துள்ளார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையை இழந்து தவித்து வந்தார். பின்னர் சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலை அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. சமையல் என்னும் கைத்தொழில் நம்மிடம் இருக்கும் போது நாம் ஏன் மற்றவரிடம் வேலை கேட்டு அலைய வேண்டும் என்று எண்ணி, தன்னிடமிருந்த சொற்ப அளவிலான பணத்தை வைத்து ஒரு சிறிய பிரியாணி கடை ஒன்றை மும்பையில் ஒரு பகுதியில் திறந்தார். அதற்கு ‘அக்ஷய் பார்க்கர் ஹவுஸ்’ என்று பெயர் சூட்டினார்.

ஆரம்பத்தில் சாதாரணமாகவே வியாபாரம் நடந்து வந்தது. நாட்கள் செல்ல செல்ல உணவின் தரம் மேம்பட்டது. வாடிக்கையாளர்கள் அவரின் கடையில் நிரம்பி வழிய ஆரம்பித்தனர்.  காரில் வருபவர்கள் கூட அவர் கடையில் வந்து பார்சல் வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். இந்த வெற்றிக் கதை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |