அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு குறித்து அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு மருத்துவ பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரிவை எதிர்த்து சேலத்தை சேர்ந்த மாணவி தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ஆறாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏழாம் வகுப்பிலிருந்து அரசு பள்ளியில் படித்ததாகவும், ஆறாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்ததால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற பாகுபாடுகளில் தன்னை போன்ற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை இருநீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தும் உத்தரவிட்டார்.