புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 5-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல முயன்ற திருச்சி மாவட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கோரிக்கைகள் கொண்ட காகிதத்தில் ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.