திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,ராமநாதபுரம் ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் அதனையொட்டி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நாளை மறுநாள் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.