வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. அதை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு மற்றும் தெற்கு திசையை நோக்கி நகரும்.
அதன் பிறகு தென் தமிழக கடற்கரையை டிசம்பர் இரண்டாம் தேதி அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், டிசம்பர் 1,2,3 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.