குளிர் காலத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
முறையாக நாம் நம் சருமத்தை பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்ல முடியும். கடைகளில் இருந்து வாங்கு வதை விட இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து முகம், கைகள், கால்கள் என நன்றாக தடவ வேண்டும். இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துவிடும். தோலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நலம்.
குளிர்காலத்தில் நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது நன்றாக இருந்தாலும், அதன் காரணமாக சருமம் நன்றாக வறண்டு, தோலில் வெள்ளை திட்டுகள் தெரிய ஆரம்பித்துவிடும். முடிந்தவரை வெது வெதுப்பான அல்ல குளிர்ந்த நீரில் குளிப்பதே சிறந்தது. இதன்மூலம் நம் சருமத்தை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்
குளிர் காலத்தில் நமது நிறம் சற்று குறைந்ததுபோல இருக்கும். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து பார்லரில் பேஷியல் செய்ய தேவையில்லை. இயற்கையான ப்ளீச்சிங் தன்மையுடைய தயிரே போதுமானது. தயிரை குளிப்பதற்க்கு 15 நிமிடங்களுக்கு முன் முகம், கை,கால்களில் நன்றாக தேய்த்து அதன்பின் நல்ல குளிர்ந்த நீரில் குளிக்கலாம். இதன்மூலம் இயற்கையான முறையில் நமது நிறம் பராமரிக்கப்படுவதோடு, சருமமும் ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்
குளிர்காலங்களில் உதடுகள் நன்றாக வறண்டு வெடிப்புகள் ஏற்படுவதுண்டு. இதன்காரணமாக காரமான உணவுகளை உண்ண முடியாது. எனவே உதடுகளை பராமரிப்பதும் மிக அவசியம். வெண்ணை அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உதட்டில் தடவி, பின் இதற்காகவே பல் விளக்க உபயோகிக்கப்படும் சாப்ட் ப்ரஷ்ஷில் மென்மையாக தேய்த்து கொடுக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் செய்தால் நல்ல பலன் இருக்கும். இதன் மூலம் வறண்ட தோல் வருவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.
உடலை என்னதான் வெளிபுறத்தில் இருந்து அழகு படுத்த நினைத்தாலும், நாம் உண்ணும் உணவுகள் தாம் நம் ஆரோக்கியத்தையும், அழகையும் தீர்மானிக்க முக்கிய இடம் வகிக்கிறது. தண்ணீர் தாகம் எடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 2 லிட்டர் நீரையாவது குடிக்க வேண்டும். எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். சருமம் ஆரோக்கியமானதாக இருக்க பழங்களும், தண்ணீரும் மிக முக்கியமானது.