ஆண்கள் சிறந்த ஆண்மைக்கான பண்பை பெறக்கூடிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
மாற்றம் என்பதே வாழ்க்கையின் விதி. எல்லா சிறந்த குணங்கள் நிரம்பிய ஒருவர் கிடையாது. நாம் எல்லோருமே குணங்களும், குறைகளும் நிரம்பியவர்கள் தான். ஆனால் சிறந்த குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் கொஞ்சம் அதற்காக உழைக்க வேண்டும். அந்த வகையில், உங்களை மேலும் சிறந்தவராக மாற்றும் எளிய வழிகளை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு உங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.
உங்களை நேசியுங்கள்:
உங்களை நீங்கள் நேசியுங்கள், உங்களை நீங்கள் மதியுங்கள். உங்கள் பலங்கள், பலவீனங்கள் மற்றும் உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள். இந்த உலகில் எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் யாரும் இல்லை. நீங்களும் ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை உணருங்கள். அதே நேரம் உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்ம ரீதியான ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இலக்குடன் இருங்கள் :
ஆண்கள் இயல்பாகவே குறிக்கோள் கொண்டவராக இருப்பர். அதற்கான காரணம் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமல்லாது, தங்களை சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்து மரியாதையையும், பாராட்டையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே வேலை அல்லது தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கென புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயலுங்கள். உங்களை நீங்களே வெல்லுங்கள்.
வாக்கை காப்பாற்றுங்கள் :
வாக்கை காப்பாற்றுபவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடைக்கும். மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர்கள் இருப்பார்கள். ஒரு மரியாதைக்குரிய ஆண் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தன் வாக்கை காப்பாற்றுவார். ஆனால் மிகைப்படுத்தி அல்லது பொய் சொல்கிற, வாக்கை மீறுகின்ற ஏமாற்றும் ஆண்களை எப்போதும் மற்றவர்கள் மதிப்பதில்லை.
பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்:
ஓர் ஆணுக்கும், முதிர்ச்சியற்ற நபருக்கும் இடையேயான வித்தியாசமே அவர்கள் பொறுப்பேற்கிறாரா ? இல்லையா ? என்பதில் தான் உள்ளது. மரியாதைக்குரிய ஆண்கள் எப்போதுமே தாங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வர். ஆகவே ஒரு வெற்றிகரமான ஆணின் பண்பு வெளிப்படுவதே அவரது பொறுப்பேற்கும் குணத்தில்தான்.
நீங்களாக இருங்கள்:
புறச் சூழ்நிலைகள் மற்றவர்களின் அழுத்தங்கள் உங்களை நெருக்கலாம். இயல்பை மாற்ற தூண்டலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து உங்கள் சுயத்தை காப்பாற்றிக் கொள்வதுடன், நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சியும் திருப்த்தியும் கொள்ளுங்கள். இது உங்களைத் தனித்துவம் கொண்டவராக காட்டும்.
எதிர்காலத்திற்கான திட்டம் :
எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவதுடன் நிற்காமல், அதை அடைவதற்கான செயலில் ஈடுபடுவது உங்களை சிறந்தவராக மாற்றும். நிகழ்காலத்தில் வாழ்வது முக்கியம் தான். அதற்காக எதிர்காலம் குறித்து அலட்சியமாக இருந்தால் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும்.