தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசடைவதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்துவதிலும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் இது சாத்தியமாகி பலரும் இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில், பிரிட்டனில் 2040 முதல் புதிய பெட்ரோல், டீசல் வகை கார் விற்பனைக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு பகுதியாக 2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2035 முதல் சிறிது சிறிதாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான ஊக்குவிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மிக விரைவில் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.