மும்பையில் கட்டிட உள்வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ரிப்பாப்ளி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2018 -ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவருக்கு தர வேண்டிய பல லட்சம் ரூபாய் பணத்தை திரு. அர்னாப் கோஸ்வாமி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் இதனால் மனமுடைந்த கட்டிட வடிவமைப்பாளரும் அவரது தாயாரும் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த இருவரின் தற்கொலையை தூண்டியதாக திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு கோரி திரு. அர்னாப் கோஸ்வாமி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் அவரை ஜாமினில் விடுவிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள திரு. கோஸ்வாமி சம்பந்தப்பட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி திரு. கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.