பெங்களூருவில் வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.
பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மிக தீவிரமாக நடந்தது . தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதால் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு உடனடியாக வெளியேறினர். அதனால் தீ விபத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பல வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனை அடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.