நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் எண்ணற்ற குடும்பங்களை மோடி அரசு சிதைத்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா என்பவர் கடந்த இரண்டாம் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் படிப்பைத் தொடர முடியுமா என்ற கவலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அரசு வேண்டும் என்று நாடு தழுவிய ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எண்ணற்ற குடும்பங்களை சிதைத்து வருகிறது. இதுதான் உண்மை” என்று அவர் கூறியுள்ளார்.