காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல் கோவில் தெருவில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் வினிதா (வயது 19) என்பவர் கல்லூரியில் 2ம் வருடம் படித்து வந்துள்ளார். இவரும் ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வினிதாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வினிதா வீட்டை விட்டு வெளியேறி மாசிலாமணியை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நேற்று காலையில் தமிழர் விடுதலை களக நிர்வாகி முத்துகுமரன் மற்றும் உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் அவர்கள் கொடுத்த மனுவில், “வினிதாவின் குடும்பத்தினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எஸ்.பிஅலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.