புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதையறிந்த கிராம மக்கள் கென்னடி கண்ணன் தலைமையில் சாலையில் உட்கார்ந்து மதுக்கடை வேண்டாம் என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி தாசில்தார் பழனிக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அந்த இடத்தில் மதுக்கடை அமைக்கப்படாது எனவும், நிரந்தரமாக மதுக்கடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்ததால் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.