மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், புல்டோசர் வாகனங்களில் உதவியுடன் ஆழ்துளை கிணற்றை நோண்டி குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு குழந்தையை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.