மர்ம நபர் ஒருவர் 2 பள்ளி மாணவிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள குரோய்டன் நகரில் மூன்று நாட்களில் இரண்டு மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த மாதம் நவம்பர் 4ம் தேதியன்று 15 வயது பள்ளி மாணவி ஒருவர் நடந்து செல்லும் போது வழி மறித்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பிடித்து அவரின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். இதேபோல் அதற்கு இரண்டு நாள் கழித்து நவம்பர் 6ம் தேதியன்று 15 வயதுடைய மற்றொரு பள்ளி மாணவி நடந்து செல்லும்போது வழிமறித்த மர்ம நபர் அவரை பிடித்து கையில் கத்தியால் குத்தியுள்ளார். இந்நிலையில் இந்த இரு மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த இரு தாக்குதலுமே ஒரே நபரால் தான் நடந்துள்ளது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும் இந்த இரண்டு சம்பவங்களும் குறுகிய இடைவெளியில் தான் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் வேறு வேறு பள்ளியில் படித்ததால் ஒருவரை ஒருவர் தெரியாது” என்று தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சிசிடிவியில் ஆய்வு செய்த காவல்துறையினர் அதில் மர்ம நபரின் முகம் பதிவாகியிருந்ததை கண்டுபித்துள்ளனர். இதனால் இந்த மர்ம நபர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் உடனே காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.