அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஏறக்குறைய 10 – 11 மாதங்கள் ஆகியும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. தற்போதைய சூழலில் உலக அளவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தொற்றில் முதலிடம் வகித்துள்ளது. முதலில் ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர், 70 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஒருகட்டத்தில் அது குறைந்து 28,000 என்ற அளவிற்கு வந்தது.
பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு என அடுத்தடுத்து நிகழ்வுகளால் தற்போது இதுவரை இல்லாத அளவாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகின்றது. கடந்த 3 நாட்களாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் இதுவரை பதிவாகாத அளவாக ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. உலகளவில் 4 கோடியே 96 லட்சத்தி 67 ஆயிரத்து 697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. இதில் 12 லட்சத்தி 48 ஆயிரத்து 479 பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரத்து 724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.