திருச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போது, வருகின்ற 2021ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும், பழுதான சிஸ்டத்தை சரி செய்வதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்தச் செய்தியை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா காலத்தில் கட்சி தொடங்கலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் திருச்சி மாநகரில் உள்ள அவரின் ரசிகர்கள் பரபரப்பான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், “எம்எல்ஏ மற்றும் எம்பி பதவி வேண்டாம். தொண்டர் பதவி மட்டுமே போதும். ஏழைகளின் முதல்வரே மாற்றம் உங்களால் மலரட்டும்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்தை எப்படியாவது இந்த முறை அரசியல் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.